வெவ்வேறு திசைகளில்
வெவ்வேறு முடிவுகளை
நோக்கிப்பறக்கும்
காலப்பறவை நாம்...
கூழாய்ப்போன நம்மை
இணைத்துப் பார்த்து
அழகுபடுத்தி
ரசிக்கிறது இந்த
பாழாய்ப்போன காதல்...
இரட்டைப்பரிணாம
வரைபடத்தில் நம்
காதலைத் தேடிப்பார்க்கிறேன்...
அது
சுழியத்தில் தொடங்கி
சுழியத்திலேயே
நடைபழகுகிறது....
காதல் என்ற அந்த
ஒற்றைவரிக் கவிதை
தவிர வேறெங்கும்
உன்னோடு
இணைந்திருக்கும் பாக்கியம்
கிட்டவேயில்லை எனக்கு...
ஆனால் ஒரு மகிழ்ச்சி..
என்னில் காதலைத்
தேடிப்பார்க்கையில்
வினாடி தாமதிக்காமல்
சுழியத்திலிருந்தே உன்
விழியம்புகள் என்
வழியமைக்கத்
தொடங்கிவிடுகின்றன...
வலது புறத்தில்
நீண்ட x அச்சில்
உன் பயணம்...
வடதுருவத்தில்
நீளும் y அச்சாக
என் பயணம்....
காதல் சுழியம்...
வாழ்க்கை இந்த
வரைபடம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக