உன் பார்வையை x என்றும்
வார்த்தையை y என்றும் கொண்ட
சூத்திரத்தில்
காதல்விடைதேடிப்
பிடிக்க முயல்கிறேன்...
நான் + நீ = காதல் ...............(1)
நான் - நீ = சோகம் .............(2)
------------------------------ --------------
2 நான் = காதல் + சோகம்
(2 என்பது மாறிலி, மற்றும் அனைத்தும் இரண்டடிமானத்தைக் கொண்டது என்பதால் 2ஐ நீக்குகிறேன்...)
எனவே
நான் = காதல் + சோகம் .............(3) (நீ இல்லாதபோது)
சமன்பாடு (2) ஐ சமன்பாடு (1)ல் பிரதியிட
(காதல் + சோகம்) + நீ = காதல்
நீ = காதல் - காதல் - சோகம்
நீ = (-) சோகம்
(-)சோகம் = சுகம் எனக்கொள்க...
எனவே
நீ = சுகம் (நான் இல்லாதபோது)
நான் = காதல் + சோகம் (நீ இல்லாதபோது)
உன் விழிகள்
மொழிந்த காதல்
பகு எண்கள்...
இதழ்கள்
மொழியாத காதல்
பகா எண்கள்..
சிற்சில பகுஎண்களுடன்
முழுக்க முழுக்க
பகா எண்களைக்
கட்டிக்கொண்டு
உன்
இயற்கணிதத்தில்
நுழைகிறேன் - நீயோ
வரையறையற்ற
விடைகளைக் கொடுத்து - என்
வகைக்கெழுக்களை
வகையற்ற புழுக்களாக்கி
நகைக்கிறாய் - உன்
சிகைக்குள் புதைந்து
சிதைந்துபோகிறது சிந்தனை...
இது எந்தவகைக் கெழு..?
எனைக்காண
வேண்டுமென எத்தனித்து
நான் காணா நேரத்தை
வேண்டுமென்றே கணித்து
ரசித்துப்பருகுகிறாய் நீயும்....
என் காதல் நோயை....
இதன்மூலம்
இயல்பான செயல்களின்
கணித வெளிப்பாடே
இயற்கணிதம் என்று
கொள்கிறேன்....
கரையைத் தீண்டுதல்
அலையின் இயல்பு...
தரையைத் தீண்டுதல்
மழையின் இயல்பு...
ஆக்ஸிஜன் உறிஞ்சுவது
உயிரின் இயல்பு...
ஆக்ஸீகரணமடைதல்
இரும்பின் இயல்பு...
தெள்ளத்தெளிவென புரிகிறது...
இயற்கணிதம் என்பது
என்னவென்று...
விண்ணைத் தீண்டியும்
தீண்டாமல் நிலவு இன்புறுகிறது...
உன்னைத் தீண்டியும்
தீண்டாமல் நான் இ(து)ன்புறுகிறேன்...
இதுதான் இயற்கணிதம்...
இயல்புக்கு முற்றிலும்
முரணானது உன் காதல்...
நான் அறியாமல் என்னை
நோக்கவே விரும்புகிறாய்..
என் பார்வையை நீ
விரும்புவதில்லை...
விண்ணில் நிலவு ஜொலிப்பது
இயல்புதானென்றால் உன்
கண்மீது என்கண்
மொய்ப்பது மட்டும்...???
நீ என்
காதலை விரும்பிய
அளவிற்கு
என்னைவிரும்பவில்லையோ...?
தொடர்ச்சியாய்
என்னைத் தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கிறது உன்
எண் விளையாட்டு
இயல்பு மாறாத
இயற்கணிதமாய்...
மீண்டும் மீண்டும்
தெளியவைத்துக் குழப்புகிறது
உன் எண்ண விளையாட்டு...
இது என்ன விளையாட்டு...?
ஒருவேளை நான் உன்
இயல்பைக் கணித்திருந்தால்
இந்த இயற்கணிதத்
தேடலுக்கு
தேவையிருந்திருக்காதோ....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக