அழகை அள்ளித்
தெளித்தபடி வருகிறாய்...
உன்னை
முகந்து ஊற்றி
தன்னை நனைத்தபடி
என்னையும் நனைத்துக்
கொ(ள்)ல்கிறது காதல்....
உன் முகப்பொலி(ழி)வில்
என் காதல் ஒரு
முகத்தலளவை...
பனிப்பொழிவைவிட
குளிர்ச்சியாய்ப் பொழிகிறது
இனிய வார்த்தைகள் - உள்ளம்
மிளிர்ந்து ரசிக்கிறேன்...
கனியினும் சிறந்த
தளிரெனப் பூத்த இதழசைவில்
கிளர்ச்சியின் உச்சியில்
என்னை இழக்கிறேன்....
நீ பெய்தலளவை..
நான் நனைதலளவை...
வெறும் எழுத்துக்களால்
உன்னை வரையறுக்கவியலாது....
நீ கவிதை....
கடைக்கண் பார்வை
நீட்சியில் என்
காதலை அளக்கிறாய்...
நீட்டலளவை நீ....
உலகின்
ஒட்டுமொத்த அழகினை
அள்ளிக்கொணர்ந்து
தெறிக்கிறாய்..
துள்ளித் துளிர்த்து
பறிதவித்து உயிர்துடித்துப்...
புள்ளியடிக்கிறது காதல்...
நீ தெறித்தளலவை...
நிறுத்தப்படாத இந்த
ஒரேயொரு இதயத்தை
நிறுத்துப்பார்த்து
காதல் படிக்கல்லை
வாழ்க்கைப் படிக்கட்டாக்குகிறாய்...
நீ நிறுத்தளலவை...
எண்ணிலடங்கா என்
எண்ணப்பள்ளங்களில்
ஒவ்வொரு அறைகளிலும்
வண்ணப்பூப்போல உன்
மாயபிம்பம் - நீ என்
எண்ண(ல்) அளவை...
கொஞ்சம் கொஞ்சமாய்
ஏங்கவைத்து உனைக்
கொஞ்ச நினைக்கும் என்னைக்
கெஞ்சவைக்கிறாய்..- என்
சொற்ப செயல்பாட்டையும்
உன்மேல் சார்த்திக்கொள்கிறாய்...
நீ சார்த்தல் அளவை...
இதுபோல் எந்த
அளவைகளாலும் என்
காதலை அளக்கமுடியாது...
வெற்றிடத்தை
எதனால் அளக்கமுடியும்..??
எல்லா பொருளிலும்
பிம்பமாய் ஜொலிக்கிறாய்..
கலப்பற்ற உன் காதலை
அளவே இல்லாமல்
அளக்கமுயன்று
தோற்கிறது இந்த
இதய அளவை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக